பால்கர் மாவட்டத்தில் கனமழை: வசாயில் நிலச்சரிவில் சிக்கி தந்தை-மகள் பலி
|பால்கர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையால் வசாயில் நிலச்சரிவில் சிக்கி தந்தை-மகள் பலியாகினர். தாழ்வான இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
வசாய்,
பால்கர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையால் வசாயில் நிலச்சரிவில் சிக்கி தந்தை-மகள் பலியாகினர். தாழ்வான இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நிலச்சரிவு
பால்கர் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வசாய்-விரார் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வசாய்-விரார் இடையே சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் வசாய் கிழக்கு பொய்தா பாடா, ராஜவலி, வக்ரால்பாடா போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பொய்தா பாடா அருகே மலைக்குன்றில் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
தந்தை-மகள் பலி
இந்த நிலச்சரிவின் காரணமாக குன்றின் அடிப்பகுதியில் இருந்த குடிசைவீடுகள் மீது கற்கள், மண் சரிந்தது. இதில் அங்கு வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கினர். தகவல் அறிந்த மாநகராட்சி மீட்பு படையினர் மற்றும் புனேயில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மண் குவியலில் இருந்து 2 பேரின் உடலை மீட்டனர். விசாரணையில் அவர்கள் அனில் சிங்(வயது45) மற்றும் அவரது மகள் ரோஷினி (16) என தெரியவந்தது.
மேலும் அனில் சிங்கின் மனைவி வந்தனா சிங் (வயது40) மற்றும் மகன் ஓம் (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நீடித்தது.
மழை அளவு விவரம்
பால்கர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரம் வரையில் பெய்த மழை அளவு விபரம் வருமாறு:-
வசாயில் 3.8 செ.மீ, ஜவகர் 12.6 செ.மீ, விக்ரம்காட் 10.9 செ.மீ, வாடாவில் 14.9 செ.மீ, தகானுவில் 7.3 செ.மீ, பால்கரில் 11.3 செ.மீ, தலசேரியில் 2.3 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வாடாவில் 15 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக பால்கர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் சூர்யா அணையில் கிடு கிடு வென நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேபோல மழை தொடர்ந்தால் 2 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்து உள்ளார்.