பெண்களிடம் பணமோசடி செய்த போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது
|திருமண இணையதளம் மூலம் பெண்களிடம் பணமோசடி செய்த போலி ஐ.பி.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
திருமண இணையதளம் மூலம் பெண்களிடம் பணமோசடி செய்த போலி ஐ.பி.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திருமண இணையதளத்தில் அறிமுகம்
மும்பையை சேர்ந்த 26 வயது பெண், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமண வரனுக்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது, அதில் போலீஸ் சீருடையில் வரன் ஒன்று இருப்பதை கண்டார். இதில், அந்த வரன் பெயர் அபிஜித் காவ்டே எனவும் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், இருந்த செல்போன் நம்பரை அப்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.
இதில், எதிர்முனையில் பேசிய ஒருவர், தான் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருப்பதாகவும், தனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் எனவும் தெரிவித்தார். மேலும் சத்தாராவில் தான் ஸ்டாபெரி பண்ணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய அப்பெண் சில மாதங்களாக அபிஜித் காவ்டேயிடம் சாட்டிங் செய்து வந்தார்.
பணமோசடி
அப்போது, அப்பெண்ணிடம் அபிஜித் காவ்டே தனக்கு விமான நிறுவனத்தில் தெரிந்த அதிகாரிகள் உள்ளனர். ஆகவே உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்தார். மேலும் வேலைக்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து அப்பெண் வேலை வாங்கி தரும்படி ரூ.73 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து உள்ளார்.
சில நாட்கள் கழித்து பணி நியமன ஆணையை அப்பெண்ணிற்கு அபிஜித் காவ்டே அனுப்பி வைத்தார். இதனை பெற்ற பெண் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், அது போலியானது என தெரியவந்தது. இது பற்றி அப்பெண் போலீசில் புகார் அளித்தார்.
போலீசில் சிக்கினார்
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காட்கோபர் பகுதியை சேர்ந்த அபிஜித் காட்வே ஐ.பி.எஸ் அதிகாரி என போலியாக கூறி திருமண இணைய தலம் மூலம் இதே பாணியில் பல பெண்களிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை நேற்று பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.