மும்ரா ரேத்தி பந்தரில் 2 படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்கள்; போலீசார் மீட்டு விசாரணை
|மும்ரா ரேத்தி பந்தர் கழிமுக பகுதியில் 2 படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே,
மும்ரா ரேத்தி பந்தர் கழிமுக பகுதியில் 2 படகுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிபொருட்கள் பறிமுதல்
மும்ரா ரேத்திபந்தர் கழிமுக பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக வருவாய் துறையினர் போலீசாருடன் சோதனை நடத்தினர். அப்போது ஆள் இல்லாத 2 படகுகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்றன. அந்த படகில் சோதனை போட்டபோது வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. 2 படகுகளில் இருந்த 17 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 16 டெட்டனேட்டர்களை மீட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த வெடிப்பொருட்கள் கல்குவாரியில் வெடி வைக்க பயன்படுத்தக்கூடியதாகும். மேலும் சட்டவிரோதமாக மீன் பிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆசாமிகள் யார் எனவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட அவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் படகுகளின் உரிமையாளர் யார்? என்றும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கல்வா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.