உத்தவ் கட்சியின் தசரா பொதுக்கூட்டம்: தாதர் சிவாஜிபார்க் மைதானம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
|தசரா பொதுக்கூட்டத்தை யொட்டி தாதர் சிவாஜிபார்க் மைதானம் அருகே சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக துணை கமிஷனர் அறிவித்து உள்ளார்.
மும்பை,
தசரா பொதுக்கூட்டத்தை யொட்டி தாதர் சிவாஜிபார்க் மைதானம் அருகே சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக துணை கமிஷனர் அறிவித்து உள்ளார்.
சிவாஜிபார்க் மைதானம்
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சி அண்மையில் அனுமதி அளித்தது. இதனை யொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெறும் தசரா பொதுக்கூட்டத்தை நடத்த தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து திரளாக கலந்து கொள்கின்றனர். எனவே தாதர் சிவாஜிபார்க் மைதானம் அருகே தசரா பொதுக்கூட்டத்தை யொட்டி சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
போக்குவரத்துக்கு தடை
இது குறித்து போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் டாக்டர் ராஜூ புஜ்பால் பிறப்பித்த உத்தரவின் படி தாதரில் எஸ்.வி.எஸ் சாலை, சித்திவிநாயகர் கோவில், கெலுஸ்கர் சாலை உள்பட பல சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சித்திவிநாயகர் கோவிலில் இருந்து மாகிம் கபாட் பஜார் சந்திப்பு சாலை, எஸ்.கே போலே சாலை, அகர்பஜார், போர்த்துகீசிய தேவாலயம், கோகலே சாலை ஆகியவற்றில் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. தசரா பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி தாதர் மேற்கு சேனாபதி பாபட் மார்க் ரோடு, காம்கர் சாலை, எல்பிஸ்டன் சாலைகளில் செய்யப்பட்டு உள்ளது. இதைத்தவிர ஓரிரு சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.