கர்நாடகாவை சேர்ந்த திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு
|மும்பையில் நடந்த விழாவில் கர்நாடகாவை சேர்ந்த திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையில் நடந்த விழாவில் கர்நாடகாவை சேர்ந்த திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
பிரபஞ்ச அழகி போட்டி
மும்பையில் லிவா பிரபஞ்ச அழகி (லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்) போட்டி நடந்து வந்தது. இந்த போட்டியின் முடிவுகள் நேற்று நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டது. இதில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகி திவிதா ராய், லிவா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் உலக பிரபஞ்ச போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்.
இதேபோல தெலுங்கானாவை சேர்ந்த பிரகன்யா அய்யாகாரி, லிவா சுப்ராநேஷனல் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் உலக சுப்ராநேஷனல் அழகி போட்டியில் இந்தியாவுக்காக கலந்து கொள்வார். இதேபோல ஒஜஸ்வி சர்மா, லிவா மிஸ் பாப்புலர் சாய்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹர்னாஸ் கவுர் சந்து கவுரவிப்பு
இதேபோல விழாவில் 2021-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற ஹர்னாஸ் கவுர் சந்து கவுரவிக்கப்பட்டார். அவருக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவின் 'பிரைட் ஆப் இந்தியா' கோப்பை வழங்கப்பட்டது. இதுதவிர விழாவில் முன்னாள் உலக பிரபஞ்ச அழகி லாரா தத்தா, அழகிகள் மேகர் காஸ்டலினோ, சங்கீதா பிஜ்லானி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்டவர்களின் சாதனைகளும் கொண்டாடப்பட்டது.
சச்சின் கும்பர் தொகுத்து வழங்கிய விழாவில் மவுனி ராய், நேகல் சவுதாஸ்மா, ரித்திகா காத்னானி உள்ளிட்டவர்களின் நிகழ்ச்சிகளும் நடந்தன.