சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை விதான் பவனில் இன்று நடக்கிறது
|சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை விதான் பவனில் இன்று நடக்க உள்ளது.
மும்பை,
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை விதான் பவனில் இன்று நடக்க உள்ளது.
தகுதி நீக்க வழக்கு
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. முன்னதாக ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதேபோல ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் விசாரித்து வருகிறார்.
இன்று விசாரணை
அடுத்த வாரம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை நடைபெறும் என ராகுல் நர்வேக்கர் கூறியிருந்தார். மேலும் விசாரணைக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பாக சட்டசபை ஊழியர் ஒருவர் கூறுகையில், "சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு விதான் பவனில் நடைபெற உள்ளது. விசாரணைக்கு வருமாறு சிவசேனாவின் இருதரப்பையும் சேர்ந்த 54 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உள்ளோம்" என்றார்.