தானேயில் தேவி சிலை ஊர்வலத்தில் தகராறு; கல்வீச்சில் ஒருவர் காயம்
|தானே தேவி சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் நடந்த கல்வீச்சில் ஒருவர் காயமடைந்தார்
தானே,
நவராத்திரி விழா ஆண்டுதோறும் மும்பை பெருநகர் மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 9 நாள் நவராத்திரி கொண்டாட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு தானே, வாக்ளே எஸ்டேட் அனுமன் நகர் பகுதியில் தேவி சிலை ஊர்வலம் நடந்தது. சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மர்மநபர்கள் கூட்டத்தில் பட்டாசு வெடித்தனர். கூட்டத்தில் பட்டாசு வெடித்ததால் அங்கு நின்று இருந்த 4 பேர் தீக்காயம் அடைந்தனர். இதேபோல கல்வீசி தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் காரணமாக சிலை ஊர்வலம் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தீக்காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவம் குறித்து 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.