தசரா பொதுக்கூட்ட அனுமதி மறுப்பு பா.ஜனதாவின் மோசமான திரைக்கதை- உத்தவ் அணி குற்றச்சாட்டு
|தசரா பொதுக்கூட்ட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பா.ஜனதாவின் மோசமான திரைக்கதை என உத்தவ் தாக்கரே அணியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மும்பை,
தசரா பொதுக்கூட்ட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பா.ஜனதாவின் மோசமான திரைக்கதை என உத்தவ் தாக்கரே அணியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மோசமான திரைக்கதை
சிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறியதாவது:-
உத்தவ் தாக்கரேவுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இது எல்லோரையும் பிரச்சினையில் தள்ளி அதில் அரசியல் செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் மிகமோசமான திரைக்கதை. அவர்கள் உத்தவ் தாக்கரேயையும், சிவசேனாவையும் தனிமைப்படுத்த விரும்புகின்றனர். எங்களுக்கு துரோகம் செய்த சில துரோகிகள் அவர்களுடன் இருப்பதால் அவர்களுக்கு அதிக பலம் கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திட்டமிட்டபடி நடைபெறும்
இதேபோல மாநகராட்சியால் அனுமதி மறுக்கப்பட்டாலும் சிவாஜிபார்க்கில் திட்டமிட்டப்படி தசரா பொதுக்கூட்டம் நடைபெறும் என உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த அஜய் சவுத்ரி கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினால் அது கண்டிப்பாக அங்கு நடைபெற வேண்டும். நீங்கள் அனுமதி தந்தாலும், தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் கூட்டம் நடைபெறும்" என்றார்.