அபு ஆஸ்மி எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது
|அவுரங்காபாத் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபுஆஸ்மிவிற்கு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
அவுரங்காபாத் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபுஆஸ்மிவிற்கு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவுரங்காபாத் பெயர் மாற்றம்
மராட்டியத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மந்திரி சபையை கூட்டினார். இந்த கூட்டத்தில் அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் எனவும் உஸ்மானாபாத் நகரை தாராசிவ் என்று பெயர் மாற்றம் செய்ய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அபுஅஸ்மி, மேற்கண்ட பெயர் மாற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
2 பேர் கைது
இதற்கிடையில் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அபுஆஸ்மிக்கு கொலை மிரட்டல் போன் அழைப்புகள் வந்தன. இது தொடர்பாக அவர் கொலாபா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் நாசிக் மாவட்டம் நிபாத் பகுதியை சேர்ந்த பவுசா சாகேப் சோனாவானே என்பவர் கொலை மிரட்டல் அழைப்பு விடுத்தது தெரியவந்தது. இதே போல புனே ஹவேலி தாலுகா பகுதியை சேர்ந்த வியாபாரி தானாஜி யேவட் என்பவரும் மிரட்டல் அழைப்பு விடுத்தது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.