ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தாதா ரவி புஜாரியின் கூட்டாளி கைது; விமான நிலையத்தில் சிக்கினார்
|ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவான தாதா ரவிபுஜாரியின் கூட்டாளியை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
மும்பை,
ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவான தாதா ரவிபுஜாரியின் கூட்டாளியை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்
மும்பையை சேர்ந்த ரோமா பில்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மகேந்திரா. கடந்த 2017-ம் ஆண்டு ஒருவர் தாதா ரவிபுஜாரி பெயரை சொல்லி அவரை மிரட்டி ரூ.10 கோடி கேட்டு உள்ளார். இல்லையெனில் கொன்று விடுவதாக கூறியதோடு, துப்பாக்கியோடு சில நபர்களை அனுப்பி வைத்தார். தகவல் அறிந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரவிபுஜாரியின் கூட்டாளியான விஜய் சால்வி என்பவருக்கு இந்த கொலை மிரட்டலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது மோக்கா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
விமான நிலையத்தில் கைது
ஏற்கனவே அவர் மீது கஸ்தூர்பா மார்க், சம்ந்தா நகர், காசர்வட்வலி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் ஆயுதம் கடத்தல் சட்டபிரிவின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதன்பேரில் அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்து இருந்தனர். தலைமறைவான விஜய் சால்வி நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் மும்பை வரவுள்ளதாக தகவல் கிடைத்தது. இதன்ேபரில் போலீசார் விமான நிலையம் சென்று அவரை பிடித்து கைது செய்தனர்.