சுங்க கட்டண விவகாரம்: ராஜ் தாக்கரேயை வீட்டில் சென்று சந்தித்த மந்திரி
|ஏக்நாத் ஷிண்டே அரசு சுங்க கட்டண வசூல் விவரங்களை கண்டறிவதாக உறுதி அளித்து உள்ளதாக ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
ஏக்நாத் ஷிண்டே அரசு சுங்க கட்டண வசூல் விவரங்களை கண்டறிவதாக உறுதி அளித்து உள்ளதாக ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
சுங்க கட்டண வசூல் விவரம்
நவநிர்மாண் சேனா கட்சியினர் சுங்கசாவடியில் கார் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தொிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால், சுங்க சாவடிகளை தீ வைத்து எரிப்போம் என்று அந்த கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து பேசினார். நேற்று மாநில பொதுப்பணித்துறை மந்திரி தாதா புசே, ராஜ் தாக்கரேயை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு ராஜ் தாக்கரே பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-ஏக்நாத் ஷிண்டே அரசு வெளிப்படை தன்மை மற்றும் கணக்கு விவரம் தெரிவதை உறுதிப்படுத்தும் வகையில் சுங்க கட்டண வசூல் விவரங்களை கண்டறிய ஒப்புக்கொண்டு உள்ளது. அடுத்த 15 நாளில் சுங்கசாவடிகளில் நவநிர்மாண் சேனாவினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவார்கள். இதன் மூலம் சுங்கசாவடிகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
கட்டண உயர்வு
சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற மாநில அரசுக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து இருக்கிறோம். எங்கள் கட்சியினர் சுங்க சாவடிகளில் உள்ள கழிவறை, முதல் உதவி சாதனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையையும் ஆய்வு செய்வார்கள். சுங்கசாவடி அருகில் வசிக்கும் மக்களுக்கு மாத பாஸ் வழங்க வேண்டும். இதேபோல மோசமான சாலைகள் உள்ள இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.