கிங்சர்க்கிள் ரெயில்வே பாலத்தில் சிக்கி கொண்ட கன்டெய்னர் லாரி- போக்குவரத்து பாதிப்பு
|கிங்சர்க்கிள் ரெயில்வே பாலத்தில் சிக்கி கொண்ட கன்டெய்னர் லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மும்பை,
கிங்சர்க்கிள் ரெயில்வே பாலத்தில் சிக்கி கொண்ட கன்டெய்னர் லாரியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கன்டெய்னர் சிக்கியது
மும்பை கிங்க் சர்க்கிள் ரெயில்வே பாலத்தின் கீழே நேற்று முன்தினம் கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அப்போது டிரைவர் பாலத்தின் உயரத்தை சரியாக தீர்மானிக்க முடியாததால் பாலத்தின் அடியில் சென்ற போது திடீரென கன்டெய்னர் பாலத்தின் கீழ் சிக்கி கொண்டது.
இதனால் மேற்கொண்டு லாரியை எடுக்க முடியாமல் நடுவழியில் நின்றது. இந்த சம்பவத்தினால் சாலையில் வந்த மற்ற வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியில் நின்றது.
போக்குவரத்து நெரிசல்
இதன் காரணமாக அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் மாற்று வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டது. ரெயில்வே மேம்பாலத்தில் சிக்கி கொண்ட கன்டெய்னரை ராட்சத கிரேன் வரவழைத்து மீட்கும் பணி நடந்தது.
கடந்த மே மாதத்தில் இந்த பாலத்தின் அடியில் பெரிய கன்டெய்னர் லாரி சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து தற்போது 2-வது தடவையாக சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.