விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது உத்தவ், ஷிண்டே அணியினர் இடையே மோதல்- சதா சர்வான்கர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
|விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது தாதரில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கியை பயன்படுத்தியதாக சதா சர்வான்கர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது தாதரில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கியை பயன்படுத்தியதாக சதா சர்வான்கர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இரு அணியினர் மோதல்
மும்பையில் கடந்த 10 நாட்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது. இந்த கொண்டாட்டத்தின் போது பல்வேறு இடங்களில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன. மும்பை மட்டுமின்றி புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு அணியினர் இடையே பிரச்சினை ஏற்பட்டன.
இதில் கடந்த வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் விநாயகர் சிலை ஊர்வலங்களின் போது பிரபாதேவி, தாதர் பகுதிகளில் உத்தவ், ஷிண்டே அணியினர் எதிர், எதிரே சந்தித்த போது இருதரப்பினரும் ஒருவரை நோக்கி ஒருவர் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஒரு சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டது. எனினும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெரிய அளவில் மோதல் நடைபெறாமல் தடுத்தனர்.
5 பேர் கைது
இந்தநிலையில் சனிக்கிழமை இரவு ஷிண்டே அணியை சேர்ந்த சந்தோஷ் தெல்வனே தாதர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், 25 சிவசேனாவினர் அவரது தங்க சங்கிலியை பறித்து சென்றதாக கூறியிருந்தார்.
இந்தநிலையில் தாதரில் நடந்த மோதல் தொடர்பாக போலீசார் உத்தவ், ஷிண்டே அணியை சேர்ந்த 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
எம்.எல்.ஏ. மீது வழக்கு
இது குறித்து தகவல் அறிந்து நேற்று காலை சிவசேனா பெண்கள் அணியினர் உள்பட ஏராளமான தொண்டர்கள் தாதர் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். மேலும் அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல தாதர் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் ஷிண்டே அணி எம்.எல்.ஏ. சதா சர்வான்கர் தான் துப்பாக்கியால் சுட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இது தொடர்பாக அரவிந்த் சாவந்த் எம்.பி. தலைமையில் சிவசேனாவினர் தாதர் போலீசிலும் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் ஆயுத சட்டத்தின் கீழ் சதா சர்வான்கர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உத்தவ் தாக்கரே அணியினர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே உத்தவ் தாக்கரே அணியினர் கைது செய்யப்பட்ட ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் தாதர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சதா சர்வான்கர் பேனர்களை கிழித்தனர். மேலும் சதா சர்வான்கரின் அலுவலகம் மீது கல்வீச்சு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் நேற்று தாதர் போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.