அதிக வருமானம் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.9 கோடி மோசடி செய்தவர் கைது
|அதிக வருமானம் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.9 கோடி மோசடி செய்தவரை போலீசார் ஷீரடியில் வைத்து கைது செய்தனர்.
தானே,
அதிக வருமானம் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.9 கோடி மோசடி செய்தவரை போலீசார் ஷீரடியில் வைத்து கைது செய்தனர்.
போலீசில் புகார்
தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் தர்ஷன். இவர் கடந்த ஆண்டு அப்பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்களிடம் பங்குசந்தையில் முதலீடு செய்தால் 80 சதவீதம் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை தெரிவித்தார். இதனை நம்பிய ஒருவர் தனது பணத்தை அவரிடம் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு அதிக வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவர் தர்சன் வீட்டிற்கு சென்று விசாரித்தார். ஆனால் தர்சன் கடந்த சில தினங்களாக காணாமல் போய் விட்டதாக அவரது மனைவி தெரிவித்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்தார்.
ரூ.9 கோடி மோசடி
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் 33 பேரிடம் அதிக வருமானம் தருவதாக கூறி ரூ.9 கோடி அளவில் தர்ஷன் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான தர்சனை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் அகமதுநகர் மாவட்டம் ஷீரடியில் தர்சன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் ஷீரடிக்கு விரைந்தனர். அங்கு வைத்து அவரை பிடித்து கைது செய்து கல்யாணுக்கு அழைத்து வந்தனர். இந்த மோசடியில் உடந்தையாக வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.