< Back
மும்பை
26, 27-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பை

26, 27-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
23 Jun 2023 6:45 PM GMT

மும்பையில் வருகிற 26, 27-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் வருகிற 26, 27-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குடிநீர் வெட்டு அபாயம்

மும்பையில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அல்லது 2-வது வாரம் பருவ மழைக்காலம் தொடங்கிவிடும். இந்த ஆண்டு நேற்று வரை மழைக்காலம் தொடங்கவில்லை. மேலும் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் மழைக்காக மக்கள் குடை பிடித்தப்படி செல்வார்கள். இந்த ஆண்டு வெயிலில் இருந்து தப்பிக்க குடைகளுடன் வெளியே சென்று வருகின்றனர். இதேபோல மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் குறைந்து உள்ளது. தற்போது ஏரிகளில் சுமார் 7 சதவீதம் மட்டுமே குடிநீர் உள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் நகரில் பலத்த மழை பெய்யவில்லை எனில் அடுத்த மாதம் நகரில் குடிநீர் வெட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் நகர்பகுதியில் 2.3 செ.மீ., புறநகர் பகுதியில் 1.8 செ.மீ. மழை மட்டுமே பெய்து உள்ளது. நேற்று காலை ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான சாரல் மழை பெய்தது. எனினும் பெரும்பாலான இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

பலத்த மழைக்கு வாய்ப்பு

இந்தநிலையில் மும்பையில் வருகிற 26, 27-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மும்பை, தானேயில் இன்று முதல் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 26, 27-ந் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யலாம். பால்கரில் வருகிற 27-ந் தேதி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மழை அறிவிப்பு மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் செய்திகள்