31 நோயாளிகள் பலியான விவகாரம்:-ஆஸ்பத்திரி டீன், டாக்டர் மீது வழக்குப்பதிவு
|நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 2 நாளில் 31 நோயாளிகள் பலியான விவகாரத்தில் ஆஸ்பத்திரி டீன், டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 2 நாளில் 31 நோயாளிகள் பலியான விவகாரத்தில் ஆஸ்பத்திரி டீன், டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 நோயாளிகள் பலி
நாந்தெட்டில் உள்ள டாக்டா் சங்கர்ராவ் சவான் அரசு ஆஸ்பத்திரியில் சமீபத்தில் 2 நாட்களில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 31 நோயாளிகள் உயிரிழந்தனர். மருந்து தட்டுப்பாடு, உரிய சிகிச்சையின்மை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதில் அந்த ஆஸ்பத்திரியில் அஞ்சலி (வயது22) என்ற பெண்ணும், அவர் பிரசவித்த குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இது தொடர்பாக அஞ்சலியின் தந்தை மோகன் ஆஸ்பத்திரி டீன் ஷியாம்ராவ் வாகோடேவிடம் புகார் அளித்து உள்ளார். அப்போது டீன், மோகனை அவதூறாக பேசி துரத்தியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் மோகன் தனது மகள் மற்றும் மகள் பிரசவித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆஸ்பத்திரி டீன் மற்றும் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது கொலை அல்லாத மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நோயாளிகள் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரி டீன் ஷியாம்ராவ் வகோடேவை சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல் ஆஸ்பத்திரி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் நடந்தேறி இருந்தது. இது தொடர்பாக அந்த எம்.பி. மீது போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.