வேலை கேட்டு மராட்டிய துணை முதல்-மந்திரி காரை மறித்த இளைஞர்கள் மீது தடியடி
|மராட்டிய துணை முதல்-மந்திரி காரை மறித்து வேலை கேட்ட இளைஞர்கள் மீது தடியடி
மும்பை,
வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் சார்பில் சுமார் ரூ.1½ லட்சம் கோடி முதலீட்டில் மராட்டியத்தில் அமைய இருந்த செமிகன்டக்டர் ஆலை திட்டம் திடீரென குஜராத் மாநிலத்திற்கு கைநழுவி போனது. இதற்கு மராட்டிய எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக சாடின. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வேலையில்லா இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாந்தெட் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சாலையில் நின்ற இளைஞர்கள் பலர் திடீரென தேவேந்திர பட்னாவிஸ் காரை மறித்தனர். அவர்கள் போலீஸ் வேலைக்கு உடனடியாக ஆள் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களில் சிலரிடம் தேவேந்திர பட்னாவிஸ் மனுக்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். இருப்பினும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அந்த இளைஞர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.