< Back
மும்பை
பாடிபேக் மோசடி வழக்கு: முன்னாள் மேயரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை
மும்பை

'பாடிபேக்' மோசடி வழக்கு: முன்னாள் மேயரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை

தினத்தந்தி
|
12 Sept 2023 1:15 AM IST

பாடிபேக் மோசடி வழக்கில் முன்னாள் மேயரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மும்பை,

பாடிபேக் மோசடி வழக்கில் முன்னாள் மேயரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மோசடி வழக்கு

மும்பையில் கொரோனா பரவலின்போது மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட உடல்களை மூடும் 'பாடிபேக்', முககவசம் போன்றவற்றை வாங்க அதிக விலை கொடுத்து மோசடி செய்ததாக பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் மும்பை முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது ஏமாற்றுதல், குற்றசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிஷோரி பெட்னேகர் முன்ஜாமீன் கோரி செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டு மனுவை நிராகரித்தது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அவரை 4 வாரங்களுக்கு கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

விசாரணை

அதேநேரம் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இதன்பேரில் வழக்கு விசாரணைக்காக முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர் நேற்று காலை 11 மணி அளவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்