வெங்காய ஏற்றுமதிக்கு விரி விதித்தது விவசாயிகள், பொதுமக்கள் என யாருக்கும் பயன் அளிக்காது - உத்தவ் சிவசேனா கட்சி விமர்சனம்
|வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதித்தது விவசாயிகள், பொது மக்கள் என யாருக்கும் பயன் இல்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.
மும்பை,
வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதித்தது விவசாயிகள், பொது மக்கள் என யாருக்கும் பயன் இல்லாதது என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.
யாருக்கும் பயன் அளிக்காது
மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரும் டிசம்பர் வரை வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து உள்ளது. இதை கண்டித்து மராட்டியத்தில் வியாபாரிகள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து இருப்பது விவசாயிகள் அல்லது பொதுமக்கள் என யாருக்கும் பயன் அளிக்காது என உத்தவ் தாக்கரே கட்சி விமர்சித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் முடங்கி உள்ளது. அது அழுகினால் ஏற்றுமதியும் செய்ய முடியாது, உள்ளூர் சந்தையிலும் விற்க முடியாது. மத்திய அரசின் முடிவு விவசாயிகள் அல்லது பொதுமக்கள் என யாருக்கும் பயனளிக்காது. விவசாயிகள் எப்போது எல்லாம் சிறிது பணம் சம்பாதிக்க வாய்ப்பு வருகிறதோ அப்போது எல்லாம் மத்திய அரசு ஏற்றுமதி வரி அல்லது ஏற்றுமதிக்கு தடை விதித்து விடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய மந்திரி விளக்கம்
இதற்கிடையே வெங்காய ஏற்றுமதி வரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்வதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 விலைக்கு 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாகவும் வெங்காயம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என கூறினார்.