ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி சாவு: 11 சிறுவர்கள் காயம்
|பீட் அருகே ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி உயிரிழந்தார். மேலும் 11 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
மும்பை,
பீட் அருகே ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி உயிரிழந்தார். மேலும் 11 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
வெடித்த சிலிண்டர்
பீட் மாவட்டம் அம்பாஜோய் பகுதியை சேர்ந்தவர் ராமா நாம்தேவ் இங்கலே(வயது 50). இவர் ஹீலியம் கியாஸ் சிலிண்டர் மூலமாக பலூன்களில் காற்று நிரப்பி குழந்தைகளுக்கு விற்பனை செய்யும் வேலை செய்து வந்தார். அவர் நேற்று இஸ்லாம்புரா- தவர்ஜா பகுதியில் பலூன்களை விற்பனை செய்து வந்தார். பலூன் வியாபாரியை பார்த்த அந்த பகுதி சிறுவர், சிறுமிகள் அவரை சூழ்ந்துகொண்டு பலூன்களை வாங்க முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அவர் வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வியாபாரி ராமா நாம்தேவ் இங்கலே உள்பட சுற்றியிருந்த சிறுவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் ராமா நாம்தேவ் இங்கலே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 11 சிறுவர், சிறுமிகள் காயம் அடைந்தனர்.
தீவிர சிகிச்சை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுவர், சிறுமிகளை மீட்டு விலாஸ்ராவ் தேஷ்முக் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.