வங்கியில் கொள்ளை முயற்சி- 7 பேர் கைது
|வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா பிரகதி நகர் அருகே சந்தேகம்படும்படியாக கும்பல் நடமாடி வருவதாக மிராபயந்தர்-வசாய்விரார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கடந்த 3-ந் தேதி இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த கும்பல் என தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய சோதனையில் கியாஸ் சிலிண்டர், பைப்புடன் ரெகுலேட்டர், கியாஸ் கட்டர், 2 கத்திகள், பேட்டரிகள், நைலான் கயிறுகள், மிளகாய் பொடி, நம்பர் பிளேட்டுகள், செல்போன் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் வங்கியில் கொள்ளை அடிக்க அவர்கள் முயற்சி செய்தது தெரியவந்தது.
இக்கும்பல் மிராபயந்தர், வசாய்விரார் உள்பட தானே, நவிமும்பை பகுதிகளில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டதாக விரார், கொல்சேவாடி, கார்கர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட ஜாகித் ஹாசன் கான் (வயது23), வாரிஸ் கான் (23), ஆசிப் கான் (25), ஹக்கம்கான் (33), ரகுநந்தன் திரிவேதி (24), நிஜாம் சையத் (25), சமர்ஜித் யாதவ் (20) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.