< Back
மும்பை
எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது தான் மத்திய அரசின் முதன்மை வேலை- சரத்பவார் கடும் தாக்கு
மும்பை

எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது தான் மத்திய அரசின் முதன்மை வேலை- சரத்பவார் கடும் தாக்கு

தினத்தந்தி
|
22 Sept 2022 5:45 AM IST

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், கைது செய்வதும் தான் மத்திய அரசின் முதன்மை வேலையாக மாறிவிட்டது என சரத்பவார் குற்றம்சாட்டினார்.

மும்பை,

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், கைது செய்வதும் தான் மத்திய அரசின் முதன்மை வேலையாக மாறிவிட்டது என சரத்பவார் குற்றம்சாட்டினார்.

அமலாக்கத்துறை நோட்டீஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் மந்திரிகள் நாவப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோர் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதேபோல கடந்த 2019-ம் ஆம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாருக்கும் அமலாக்கத்துறை வழக்கு ஒன்றில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராக தேவையில்லை என அமலாகத்துறை தெரிவித்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டப்பட்டு கைது நடவடிக்கைக்கு ஆளாகி உள்ள மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக குற்றபத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ள சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தில், "2008-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இந்த குடிசை பகுதியில் வசிப்பவர்கள் குடிசை சீரமைப்பு திட்டத்தை வலியுறுத்தி உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர். இதற்கு பிறகு பல்வேறு கட்ட சந்திப்புக்கு பிறகு தான் ராகேஷ் வாதவான், பிரவின் ராவத் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த திட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று சரத்பவார் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் முதன்மை வேலை

இன்றைக்கு தினமும் நாளிதழ்களை பார்த்தால், எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் எப்படி தங்கள் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என்பதை விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், அவர்களை கைது செய்வதும் மத்திய அரசின் முதன்மையான வேலையாக மாறிவிட்டது.

தேர்தல் முடிவு குறித்து அவர்களுக்கு சந்தேகம் எழும்போதெல்லாம், இத்தகைய நடவடிக்கைகள் முக்கிய வேலையாக மாறி விடுகிறது. நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

இதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்