20 பேரிடம் பணமோசடி செய்த ஊழியர் கைது
|மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பணமோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பணமோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.4½ லட்சம்
தானே திவாவை சேர்ந்தவர் பிரபுல் (வயது30). இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மும்பை டி வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் சமீர் படேல்கர் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. இதில் மாநகராட்சியில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்கள் மூலம் வேலைவாங்கி தர முடியும் எனஆசை வார்த்தை தெரிவித்தார்.
இதனை நம்பிய பிரபுல் தனக்கு வேலை வாங்கி தருமாறு கூறி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் வரையில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வெவ்வேறு தவணைகளில் பணம் கொடுத்து உள்ளார். இதன் பின்னர் சமீர் படேல்கரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
20 பேரிடம் மோசடி
பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதால் பிரபுல், பார்க்சைட் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில் சமீர் படேல்கர் தலைமறைவானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சமீர் படேல்கர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் தலா ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரையில் வாங்கி கொண்டு பணமோசடி செய்தது தெரியவந்தது.