ஏமன் நாட்டில் இருந்து மும்பைக்கு 14 கிலோ போதை இலை கடத்தி வந்த அமெரிக்கர் கைது
|ஏமனில் இருந்து மும்பைக்கு போதை இலை கடத்தி வந்த அமெரிக்காவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
ஏமனில் இருந்து மும்பைக்கு போதை இலை கடத்தி வந்த அமெரிக்காவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
போதை இலைகள்
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அமெரிக்காவை சேர்ந்த முகமது கசீம் (வயது33) என்ற பயணியின் பையில் மர்ம இலைகள் இருந்தது. பாதுகாப்பு படையினர் அவை தடைசெய்யப்பட்ட போதை இலைகளாக இருக்கலாம் என்று கருதினர். இதையடுத்து அவர்கள் பயணியின் டிராலி பேக்கிலும் சோதனை போட்டனர். அதிலும் அதிகளவில் மர்ம இலைகள் இருந்தன. விசாரணையில் பயணியின் பைகளில் இருந்தது தடை செய்யப்பட்ட 'காட்' போதை இலைகள் என்பது தெரியவந்தது.
அமெரிக்கர் கைது
'காட்' இலைகள் ஆப்பிரிக்கா மற்றும் ஏமன் நாட்டில் வளரக்கூடிய தாவரம் ஆகும். காய்ந்த 'காட்' இலைகள் போதை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலைகள் இந்தியாவில் 2017-ல் தடை செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போதை பொருள் தடை சட்டத்தில் அமெரிக்க பயணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 கிலோ 'காட்' இலைகளை பறிமுதல் செய்தனர்.