< Back
மும்பை
ஷிண்டே உள்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டாலும்; அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் - பரபரப்பு தகவல்
மும்பை

ஷிண்டே உள்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டாலும்; அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் - பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
4 July 2023 12:45 AM IST

முதல்-மந்திரி ஷிண்டே உள்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

முதல்-மந்திரி ஷிண்டே உள்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அஜித்பவார் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தகுதி நீக்க வழக்கு

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. தற்போது சிவசேனா கட்சி பெயர், சின்னம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வசமானது.அந்த சமயத்தில் ஒன்றுபட்ட சிவசேனாவுக்கு எதிராக செயல்பட்ட ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு இதுகுறித்து சபாநாயகர் கூடிய விரைவில் முடிவை அறிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தான் தற்போது பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் தேசியவாத காங்கிரஸ் இணைந்ததற்கான தொடக்க புள்ளி என கூறப்படுகிறது. அதாவது முதல்-மந்திரி ஷிண்டே உள்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆட்சியை மீட்டெடுக்கும் நோக்கில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரசை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

40 எம்.எல்.ஏ. ஆதரவு

இதுகுறித்து மராட்டிய சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் ஆனந்த் கல்சே கூறியதாவது:-

ராஜ்பவனில் அஜித்பவார் சமர்ப்பித்த கடிதத்தில் 40-க்கும் மேற்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக கூறியுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் பா.ஜனதாவின் பலம் 105 ஆகவும், ஏக்நாத் ஷிண்டே அணியின் பலம் 40 ஆகவும் உள்ளது. அதுமட்டும் இன்றி 10 சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவும் பா.ஜனதாவுக்கு உள்ளது.

தகுதி நீக்கம்

இந்த நிலையில் தற்போது அஜித்பவாருடன் இருப்பதாக நம்பப்படும் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜனதாவால் அரசை நடத்த முடியும். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், மீதமிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜனதாவால் ஆட்சியை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கருத்து

இதேநேரம் காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவான், " எனக்கு கிடைத்த தகவலின்படி அஜித்பவாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற சபாநாயகரின் உதவியுடன் 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு ஏக்நாத் ஷிண்டேவை பதவியில் இருந்து நீக்குவார்கள். இந்த பதவி அஜித்பவாருக்கு செல்லும்" என்றார். அதேபோல உத்தவ் பாலாசாகேப் தக்கரே சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், " ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அதன் பிறகு தொடர்ந்து ஆட்சி தொடருவதற்காகவே அஜித்பவார் கூட்டணியில் இணைக்கப்பட்டு உள்ளார்" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்