பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.88 லட்சம் அபேஸ்
|மும்மை முல்லுண்டை சேர்ந்த பெண்ணிடம் பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.88 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபர்
மும்பை,
மும்பை முல்லுண்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவருக்கு கடந்த மே மாதம் 8-ந்தேதி முகநூலில் லண்டனை சேர்ந்த ஒருவர் விமானியாக இருப்பதாக கூறி அறிமுகம் ஆனார். நாளடைவில் அப்பெண் தனது செல்போன் நம்பரை கொடுத்தார். இருவரும் சாட்டிங் செய்து வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி அப்பெண்ணிடம் திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு அப்பெண் சம்மதம் தெரிவித்தார். திருமண பரிசாக விலை உயர்ந்த பொருட்களை அனுப்பி வைப்பதாகவும், இதன்பின்னர் மும்பைக்கு வந்து சந்திப்பதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதன்பின்னர் அப்பெண்ணிற்கு அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. இதில் பேசிய ஆசாமி டெல்லி சுங்கவரித்துறை அதிகாரி பேசுவதாகவும், பார்சல் வந்திருப்பதாக கூறி சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். இதனை நம்பிய அப்பெண் பணத்தை அனுப்பி வைத்தார். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதே பாணியில் கூறி கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வரையில் ரூ.88 லட்சத்தை அனுப்பினார். ஆனால் பார்சல் எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பெண் சைபர் குற்றப்பிரிவு போலீசில் கடந்த வாரம் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.