மாவட்ட செய்திகள்
மும்பையில் திறந்து கிடக்கும் 100 பாதாள சாக்கடைகள்- ஒரு வாரத்திற்குள் மூட ஆம் ஆத்மி வலியுறுத்தல்
|மும்பையில் திறந்து கிடக்கும் 100 பாதாள சாக்கடைகளை ஒரு வாரத்திற்குள் மூட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மும்பையில் திறந்து கிடக்கும் 100 பாதாள சாக்கடைகளை ஒரு வாரத்திற்குள் மூட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மும்பை பிரிவு செயல் தலைவர் திவிஜேந்திர திவாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
100 பாதாள சாக்கடைகள்
மும்பையில் உள்ள 9 நிர்வாக வார்டுகளில் கிட்டத்தட்ட 100 பாதாள சாக்கடைகள் மூடியின்றி திறந்து கிடக்கிறது. விபத்துகளை தடுக்க இவற்றை ஒரு வாரத்திற்குள் மூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திறந்துகிடக்கும் பாதாள சாக்கடைகள் ஆண்டுதோறும் மும்பை மக்களுக்கு மரண பொறிகளாக மாறி வருகிறது. இந்த பாதாள சாக்கடை சம்பவங்கள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின்னர் தான் மாநகராட்சி செயல்படுமா?
2017-ம் ஆண்டு பிரபல மருத்துவரான தீபக் அம்ரபுர்கர் மழையின் போது வெள்ளத்தில் இதேபோன்று திறந்தகிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் 2 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
2 குழந்தைகள் பலி
செம்பூர் மற்றும் தாராவியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து 2 குழந்தைகள் இறந்தன. ஒவ்வொறு ஆண்டும் மும்பை மாநகராட்சி தனது கடமையை செய்ய தவறுவது வெட்கக்கேடானது. பாதாள சாக்கடை சம்பவங்கள் வருடாந்திர சோகமாக மாறிவிட்டது. யாரோ ஒருவர் ஆண்டுதொறும் இதன் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது.
எனவே வரும் பருவமழை காலத்திற்குள் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
---------------