< Back
மும்பை
மும்பை

தக்காளி தோட்டத்தை காவல் காக்கிறது, கண்காணிப்பு கேமரா; விலை ஏற்றத்தால் மராட்டியத்தில் ருசிகரம்

தினத்தந்தி
|
9 Aug 2023 12:30 AM IST

மராட்டியத்தில் விவசாயி ஒருவர் தக்காளியை பாதுகாக்க தனது தோட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அசத்தி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் விவசாயி ஒருவர் தக்காளியை பாதுகாக்க தனது தோட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அசத்தி உள்ளார்.

தக்காளி விலை உயர்வு

நாடு முழுவதும் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது. தற்போது விலை சற்று குறைந்து இருந்தாலும் கிலோ ரூ.100-க்கு கீழ் இறங்கவில்லை. சில இடங்களில் இன்னும் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக தக்காளி திருட்டு சம்பவங்களும் அதிகரித்து விட்டது. இதனால் தக்காளியை பாதுகாக்க வேண்டிய புதிய சுமை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் 24 மணி நேரமும் தங்களது விளைநிலத்தில் காவல் காத்து வருகிறார்கள். இந்தநிலையில் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத், கங்காப்பூர் தாலுகா சகாப்பூர் பன்ஜரை சேர்ந்த விவசாயியான சரத் ராவ்தே, தனது நிலத்தில் விளையும் தக்காளியை பாதுகாக்க கண்காணிப்பு கேமராவை பொருத்தி அசத்தி உள்ளார். இதன் மூலம் தக்காளி பயிர்களை 24 மணி நேரமும் கழுகு பார்வையால் அவர் கண்காணித்து வருகிறார். இதுபற்றி விவசாயி சரத் ராவ்தே கூறியதாவது:-

திருட்டு போனது

10 நாட்களுக்கு முன் எனது தோட்டத்தில் சுமார் 25 கிலோ தக்காளியை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். மீண்டும் தக்காளி திருட்டு போவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. இன்று சந்தையில் தக்காளிக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. 25 கிலோ தக்காளி தற்போது ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனது 5 ஏக்கர் தோட்டத்தில் 1½ ஏக்கரில் தக்காளி பயிரிட்டு உள்ளேன். அதில் விளையும் தக்காளி மூலம் ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரை கிடைக்கும் என்று நம்புகிறேன். எனவே தக்காளி பழுக்கும் வரை அதை பாதுகாக்க ரூ.22 ஆயிரம் மதிப்பில் தோட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளேன். கண்காணிப்பு கேமரா சூரிய ஒளியில் செயல்படக்கூடியது. எனவே மின்சார பிரச்சினை பற்றி கவலை இல்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை எனது செல்போனில் கூட பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

புத்திசாலித்தனம்

நவீன யுகத்தில் கண்காணிப்பு கேமரா அனைவருக்கும் சிறந்த காவலனாக விளங்குகிறது. கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதால், குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்த தருணத்தில் மராட்டியத்தை சேர்ந்த விவசாயி தனது புத்திசாலித்தனத்தை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளார். இதனால் அவரது தோட்டத்து பக்கமே செல்ல பலர் பயப்படுகிறார்களாம்.

மேலும் செய்திகள்