புனேயில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பல் - 5 பேரை மடக்கி பிடித்தனர்
|புனேயில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
புனே,
புனேயில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
ரோந்து பணி
புனே வார்ஜே பகுதியில் சந்தேகப்படும்படி சிலர் நடமாடி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் கும்பலாக சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டு இருந்ததை கண்ட போலீசார் விசாரணைக்காக அவர்களை நெருங்கி சென்றனர். போலீசார் வருவதை பார்த்த கும்பல் உடனே துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி முயன்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கி குண்டுகள் யாரையும் காயப்படுத்தவில்லை. இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை பிடிக்க விரட்டி சென்றனர்.
5 பேர் கைது
அப்போது அங்கு கும்பல் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு சசூன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, தோட்டாக்கள், 2 அரிவாள்கள் மற்றும் ஸ்குருடிரைவர், சுத்தியல் போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.