பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; சம்ருத்தி விரைவு சாலை விபத்து குறித்து விசாரணை - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவு
|சம்ருத்தி விரைவு சாலை விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மும்பை,
சம்ருத்தி விரைவு சாலை விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
தேசிய நிவாரணநிதி
சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள சம்ருத்தி விரைவு சாலையில் வைஜாப்புர் பகுதியில் கன்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். 23 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இது குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
ரூ.5 லட்சம் இழப்பீடு
இந்த விபத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. வைஜாப்புரில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயம் அடைந்தவர்களின் அனைத்து சிகிச்சை செலவுகளையும் அரசே ஏற்கும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். இதேபோல துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் வலைதள பதிவில், "விபத்தில் காயம் அடைந்தவர்கள் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் சிலர் வைஜாப்புர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் விசாரணையை தொடங்கி உள்ளது" என்றார்.