< Back
மும்பை
தானேயில் பெண்ணை மதம் மாற்றி முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு
மும்பை

தானேயில் பெண்ணை மதம் மாற்றி முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
31 Aug 2023 12:45 AM IST

தானேயில் பெண்ணை பலாத்காரம் செய்து மதம் மாற்றி, முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தானே,

தானேயில் பெண்ணை பலாத்காரம் செய்து மதம் மாற்றி, முத்தலாக் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்து முறைப்படி திருமணம்

தானே மாவட்டத்தில் கணவரை பிரிந்து தனது 7 வயது மகளுடன் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு எனக்கு சமூக வலைதளத்தில் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் தன்னை ராஜூ என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும் பிவண்டியில் தனக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று இருப்பதாகவும், என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு என்னை ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்று பலவந்தமாக பலாத்காரம் செய்தார். அதே ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி என்னை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

4 குழந்தைகள்

அவரை திருமணம் செய்துகொண்ட ஓராண்டுக்கு பின்னர் தான் அவருடைய உண்மையான பெயர் சிராஜ் குரேஷி என்பது எனக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தன்னுடன் வாழ விரும்பினால் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு என்னை கட்டாயப்படுத்தினார். அதை ஏற்று நான் மதம் மாறியதுடன், கடந்த மே மாதம் இஸ்லாமிய முறைப்படி மீண்டும் அவரை திருமணம் செய்துகொண்டேன். இந்த நிலையில் இந்த ஆண்டு குரேஷி தனக்கு ஏற்கனவே திருமணமாகி, 4 குழந்தைகள் இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

முத்தலாக்

அதுமட்டும் இன்றி என்னுடனான உறவை தொடர்ந்தால், குடும்ப சொத்தில் தனது பங்கை இழக்க நேரிடும் என்று கூறி எனக்கு முத்தலாக் கொடுத்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். போலீசார் இந்த புகாரின் பேரில் சிராஜ் குரேஷிக்கு எதிராக கற்பழிப்பு, முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்