தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
|நவிமும்பையில் தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மும்பை,
நவிமும்பையை சேர்ந்த 31 வயது தொழிலதிபர் ஒருவர் பாவ்னே எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள காலி இடத்தை தனது பெயருக்கு மாற்ற முயற்சி செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு தனியார் நிறுவன இயக்குனர்களான அசோக் பதாரே, சுஷ்மா பதாரே, ஜகதீஷ் பட்லிவாலா, பர்வேஷ் ஆகிய 4 பேர் தொழிலதிபரிடம் அந்த காலி இடத்தை அவரது பெயருக்கு மாற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதற்காக அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.2 கோடியே 10 லட்சத்தை தொழிலதிபரிடம் இருந்து 4 பேரும் பெற்றனர். ஆனால் அவர்கள் கூறியபடி பெயர் மாற்றம் செய்து தராமல் காலம் தாழ்த்திவந்தனர். இந்தநிலையில் அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை தொடர்புகொள்ள தொழிலதிபர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொழிலதிபரிடம் இருந்து வாங்கிய பணத்தை அவர்கள் தனிப்பட்ட தேவைக்காக செலவழித்து மோசடி செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
..................