< Back
மும்பை
நடுவானில் பறந்த போது புனேயில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வெடிகுண்டு பீதி; மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
மும்பை

நடுவானில் பறந்த போது புனேயில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வெடிகுண்டு பீதி; மும்பையில் அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:30 AM IST

புனேயில் இருந்து டெல்லி சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது வெடிகுண்டு இருப்பதாக பயணி கூச்சலிட்டதால் அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

மும்பை,

புனேயில் இருந்து டெல்லி சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது வெடிகுண்டு இருப்பதாக பயணி கூச்சலிட்டதால் அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

நடுவானில் பறந்தபோது...

புனே நகரில் இருந்து டெல்லி நோக்கி 'ஆகாசா' ஏர் விமானம் 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் இருந்த அஜய் தியாகி என்ற பயணி திடீரென எழுந்து, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சல் போட்டுள்ளார். இது நடுவானில் விமானத்தில் பறந்த பயணிகளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி விமானத்தை மும்பை விமான நிலையத்தில் இறக்க முடிவு செய்தார். இதுகுறித்து மும்பை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுடன், விமானத்தை மும்பை நோக்கி திரும்பினார். அதன்படி மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பயணி கைது

இதையடுத்து தயாராக இருந்த பாதுகாப்பு படையினர் விமானத்தில் ஏறி தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் நடத்திய சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பயணி அஜய் தியாகியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் புரளியை கிளப்பி பீதியை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பயணி அஜய் தியாகியை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பயணி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரிவதாகவும் போலீசார் கூறினர். வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்