மாநகராட்சி நீச்சல் குளத்தில் கிடந்த முதலை குட்டியால் பரபரப்பு
|மும்பை மாநகராட்சி நீச்சல் குளத்தில் இருந்து முதலை குட்டி மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை மாநகராட்சி நீச்சல் குளத்தில் இருந்து முதலை குட்டி மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீச்சல் குளத்தில் முதலை
மும்பை தாதர் சிவாஜி பார்க் பகுதியில் மகாத்மா காந்தி மாநகராட்சி நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளம் ஒலிம்பிக் போட்டி நடத்தும் அளவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டதாகும். தினந்தோறும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் முன் நீச்சல் குளத்தை ஊழியர்கள் ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை 6 மணியளவில் ஊழியர்கள் நீச்சல் குளத்தை ஆய்வு செய்தனர். அப்போது, குளத்துக்குள் முதலை குட்டி ஒன்று சர்வசாதாரணமாக நீந்தி செல்வதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நீச்சல் குளத்தில் இருந்து 2 அடி நீளமுள்ள முதலை குட்டியை நிபுணர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
எப்படி வந்தது?
மீட்கப்பட்ட முதலை குட்டி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அது வாழும் இடத்தில் விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நீச்சல் குளத்துக்கு முதலை குட்டி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கமிஷனர் கிஷோர் காந்தி கூறினார். மாநகராட்சி நீச்சல் குளத்தில் முதலை குட்டி மீட்கப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.