திருமணம் செய்து துன்புறுத்தப்பட்ட 15 வயது சிறுமி தூக்குப்போட்டு சாவு- ஆட்டோ டிரைவர் கைது
|நவிமும்பை,
திருமணம் செய்து துன்புறுத்தப்பட்ட 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை கடத்தி திருமணம்
நேபாள நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நவிமும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுபம் மாருதி (வயது21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கடந்த ஜூன் மாதம் சிறுமியை திருமணம் செய்வதாக கூறிய ஆட்டோ டிரைவர் அவரை கடத்தி சென்றார். வாடகை வீடு எடுத்து சிறுமியுடன் வசித்து வந்தார். சிறுமியை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்தார். சில நேரங்களில் சிறுமியை வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தி வந்தார். நாளுக்கு நாள் ஆட்டோ டிரைவர் சுபம் மாருதியின் தொல்லை அதிகரித்தது.
கைது
இதனால் விரக்தி அடைந்த சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இது பற்றி அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் நவிமும்பை ரபாலே போலீசில் புகார் அளித்தனர். இந்தபுகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சுபம் மாருதியின் கொடுமை தாங்க முடியாததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் மீது போக்சோ, கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.