< Back
மும்பை
12-ம் வகுப்பு பொது தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
மாவட்ட செய்திகள்
மும்பை

12-ம் வகுப்பு பொது தேர்வில் 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தினத்தந்தி
|
8 Jun 2022 7:02 PM IST

மராட்டியத்தில் 12-ம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மும்பை மண்டலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 12-ம் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 94.22 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மும்பை மண்டலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

94.22 சதவீதம் தேர்ச்சி

மராட்டியத்தில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 14 லட்சத்து 49 ஆயிரத்து 664 விண்ணப்பித்து இருந்தனர். இதில் 14 லட்சத்து 39 ஆயிரத்து 731 பேர் தேர்வை எழுதினர். இவர்களில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 455 பேர் ஆண்கள். 6 லட்சத்து 53 ஆயிரத்து 276 பேர் பெண்கள்.

இந்தநிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மதியம் 1 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியதில் 94.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 93.29 சதவீதமும், மாணவிகள் 95.35 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

கல்வி மண்டலங்களை பொறுத்தவரை கொங்கனில் அதிகபட்சமாக 97.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். நாக்பூரில் 96.52, அமராவதியில் 96.34, லாத்தூரில் 95.25, கோலாப்பூரில் 95.07, நாசிக்கில் 95.03, அவுரங்காபாத்தில் 94.97, புனேயில் 93.61 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

மும்பை கடைசி இடம்

தானே, நவிமும்பை பகுதிகளை உள்ளடக்கிய மும்பை கல்வி மண்டலம் மாநிலத்தில் கடைசி இடத்தை பிடித்து உள்ளது. இங்கு தேர்வு எழுதியதில் 90.91 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மும்பையை பொறுத்தவரை 3 லட்சத்து 23 ஆயிரத்து 563 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 164 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

மும்பை உள்பட பல மண்டலங்களில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்து உள்ளது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், " கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைனில் தான் வகுப்புகள் நடந்தன. குறைந்த நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்தன. குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் கடந்த ஆண்டு இறுதியில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் காரணமாகவே பொது தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்து உள்ளது" என்றனர்.

தமிழில் 98.95 சதவீதம்

12-ம் வகுப்பு பொது தேர்வில் தமிழை மொழிப்பாடமாக எடுத்து 286 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 283 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ் தேர்வில் 98.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இதேபோல பொதுத்தேர்வில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 769 மாணவர்கள் டிஸ்டிங்ஜனிலும், 5 லட்சத்து 58 ஆயிரத்து 678 மாணவர்கள் கிரேடு-1, 4 லட்சத்து 93 ஆயிரத்து 442 மாணவர்கள் 2-வது கிரேடிலும் தேர்ச்சி பெற்றனர்.


மேலும் செய்திகள்