< Back
மும்பை
41 வழக்குகளில் 83 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வாலிபர் விடுதலை - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
மும்பை

41 வழக்குகளில் 83 ஆண்டு சிறை தண்டனை பெற்ற வாலிபர் விடுதலை - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

தினத்தந்தி
|
19 July 2023 8:00 PM GMT

41 வழக்குகளில் 83 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

41 வழக்குகளில் 83 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

41 வழக்குகள்

மும்பை எரவாடா சிறையில் கடந்த 2014-ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருபவர் அஸ்லாம் சேக்(வயது30). இவர் மீது 41 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனைகளை தொடர்ந்து அனுபவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அஸ்லாம் சேக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், "நான் ஒரு படிப்பறிவில்லாதவன், 41 வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டேன். எனவே நான் சிறையில் இருந்த காலகட்டத்தை தண்டனை காலமாக கருதி என்னை விடுவிக்க வேண்டும். நான் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மெகிதே மற்றும் கவுரி கோட்சே அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்தது. மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

83 ஆண்டுகள்

குற்றவியல் நீதித்துறையின் தண்டனை கொள்கையானது, குற்றத்தை தடுப்பது மற்றும் திருந்த வாய்ப்பு அளிப்பதை அடிப்படையாக கொண்டது. சிறை தண்டனை ஒரு சீர்திருத்த நோக்கத்துடன் வழங்கப்பட வேண்டும். உண்மையில் குற்றத்தின் தன்மையை பொறுத்து குற்றவாளி தன்னை மேம்படுத்திகொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அஸ்லாம் சேக் அனைத்து வழக்குகளிலும் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றால் சுமார் 83 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் 93 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிகிறது. இதனால் அஸ்லாம் சேக் தனது வாழ்க்கை முழுவதும் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

விடுதலை

இது கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியின் தண்டனையை விட அதிகமாகும். இது நிச்சயமாக நீதியை கேலி செய்ய வழிவகுக்கும். இவ்வாறு நீதி தவறுவதை அனுமதிக்க முடியாது. மனுதாரர் தற்போது 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவர் சிறையில் கழித்த காலத்தை தண்டனை காலமாக கருதி கோர்ட்டு அவரை 41 வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்