< Back
மும்பை
சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - புல்தானா அருகே பரிதாபம்
மும்பை

சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலி - புல்தானா அருகே பரிதாபம்

தினத்தந்தி
|
3 Oct 2023 1:00 AM IST

சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் புல்தானா அருகே நடந்துள்ளது.

புல்தானா,

சாலையோரம் படுத்து தூங்கிய 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் புல்தானா அருகே நடந்துள்ளது.

தொழிலாளர்கள்

புல்தானா மாவட்டம் வாட்நேர் போல்ஜி பகுதியில் உள்ள கிராமத்தில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் சாலை ஓரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் வழக்கம்போல் இரவு சாலையோரம் அமைத்து இருந்த கூடாரத்தில் உறங்கிக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்த கூடாரம் மீது பாய்ந்தது.

5 பேர் பலி

இதில், லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய தொழிலாளர்கள் மரண ஓலம் எழுப்பினர். இதில், 3 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். சத்தம்கேட்டு எழுந்த மற்ற தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளர்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே தகவல் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சக தொழிலாளர்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 7 தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

மற்ற 5 தொழிலாளர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த கோர சம்பவத்திற்கு காரணமான லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகின்றனர். 5 தொழிலாளர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்