மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 36 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்- சூடான் நாட்டை சேர்ந்த 6 பேர் கைது
|மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 36 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சூடான் நாட்டை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 36 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சூடான் நாட்டை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 பேர் பிடிபட்டனர்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயணிகள் ஓய்வறையில் சூடான் நாட்டை சேர்ந்த 12 பேர் சந்தேகத்துக்கு இடமாக தங்கி இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்த அங்கு விரைந்து சென்றனர்.
அதிகாரிகள் வருவதை பார்த்து பயந்துபோன அங்கிருந்த 6 பேர் தங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
இதனால் உஷாரான அதிகாரிகள் அவர்கள் 6 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து, அவர்களது உடைமைகளை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர்களது உடைமைகளில் 12 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.5 கோடியே 36 லட்சம் தங்கம்
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.5 கோடியே 36 லட்சம் ஆகும். விசாரணையில், அவர்கள் தங்க கட்டிகளை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பிடிபட்ட 6 பேரையும் சாகர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களுடன் ஓய்வறையில் தங்கி இருந்த 6 பேருக்கும் கடத்தலில் தொடர்பில்லை என தெரியவந்ததை அடுத்து அவர்களை நாடு கடத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கைதான 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.