< Back
மும்பை
உல்லாஸ் நகரில் பரிதாபம் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி
மும்பை

உல்லாஸ் நகரில் பரிதாபம் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி

தினத்தந்தி
|
23 Sept 2022 5:45 AM IST

உல்லாஸ்நகரில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

அம்பர்நாத்,

உல்லாஸ்நகரில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

சேதமடைந்த கட்டிடம்

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கேம்ப் பகுதியில் 5 மாடி கொண்ட கட்டிடம் ஒன்றில் 30 குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டதால் குடியிருப்புவாசிகளை காலி செய்யும்படி உல்லாஸ்நகர் மாநகராட்சி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதன்பேரில் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் சிலர் காலி செய்து இருந்தனர். இருப்பினும் 5 குடும்பங்கள் அந்த கட்டிடத்தில் வசித்து வந்தனர்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

இந்தநிலையில் கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள வீட்டின் காங்கிரீட் மேற்கூரை நேற்று காலை 11.30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. 4-வது மாடியில் இடிந்து விழுந்த மேற்கூரையால் ஒன்றன்பின் ஒன்றாக 3, 2, 1 ஆகிய மாடி வீடுகளில் இருந்த மேற்கூரைகளும் இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் பெண்கள் உள்பட பலர் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், மாநகராட்சி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

4 பேர் பலி

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரியா தன்வானி (வயது24), ரேணு தன்வானி (54), தோலந்தாஸ் தன்வானி (58) மற்றும் சாகர் ஒச்சானி (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

கட்டிட சிலாப் இடிந்து விழுந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருவதாக உல்லாஸ்நகர் தாசில்தார் கோமல் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்