புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேர் கைது - நாசிக் அருகே பரபரப்பு
|நாசிக் மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாசிக்,
நாசிக் மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணாமல் போன சிறுவன்
நாசிக் மாவட்டம் மலேகாவ் தாலுகா போகனே சிவார் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். இவன் கடந்த 16-ந்தேதி மற்ற சிறுவர்களுடன் வீட்டருகே உள்ள மைதானத்தில் விளையாட சென்றான். இதன் பிறகு அவன் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மகனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுவனை அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் சேர்ந்து கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
4 பேர் கைது
புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்ததாகவும், அங்குள்ள மைதானத்தில் சிறுவனின் உடலை புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பாதி புதைந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர். இதில் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, கொலையாளிகள் 4 பேரையும் கைது செய்தனர். புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.