38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு மும்பையில் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலம்- கவர்னர், முதல்-மந்திரி பங்கேற்பு
|மும்பையில் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 38 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டனர்.
மும்பை,
மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடந்தது.
ஆனந்த சதுர்த்தி
இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால், பண்டிகைகளை கட்டுபாடுகள் இன்றி கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியது.
இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கடந்த 31-ந் தேதி கோலாகலமாக மும்பையில் தொடங்கியது. மும்பை முழுவதும் மண்டல்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் சார்பில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதனால் நகரமே மின் விளக்கு அலங்காரம், பந்தல்களால் திருவிழா கோலம் கண்டு இருந்தது. 10 நாட்களும் பக்தர் மண்டல்களுக்கு சென்று விநாயகரை வழிபட்டனர். முக்கிய மண்டல்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல வீடுகளிலும் கணபதியை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தியுடன், 10 நாள் கொண்டாட்டம் முடிந்தது.
விண்ணை முட்டிய முழக்கம்
ஆனந்த சதுர்த்தியையொட்டி மும்பையில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சிலைகளை பார்க்க பொது மக்கள் சாலைகளில் லட்சக்கணக்கில் திரண்டனர். மேலும் சிலைகள் கொண்டு செல்லப்படும் போது 'கணபதி பாபா மோரியா, மங்கல மூர்த்தி மோரியா' என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது.
இதேபோல நாசிக் டோல், டி.ஜே. இசையாலும் மும்பை அதிர்ந்தது. 10 நாட்கள் பூஜைக்கு பிறகு மக்கள் ஆடிப்பாடி உற்சாகமாக வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக விநாயகரை கரைக்க எடுத்து சென்றனர். சிந்தாமணி, லால்பாக் ராஜா போன்ற முக்கிய மண்டல் விநாயகர் ஊர்வலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக சாலைகளில் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே சிலைகள் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் வழிநெடுகளிலும் மக்கள் விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிப்பட்டனர். இதனால் நேற்று முன்தினம் மதியம் மண்டல்களில் இருந்து புறப்பட்ட பெரும்பாலான சிலைகள் நள்ளிரவில் தான் கடலில் கரைக்கப்பட்டன.
முதல்-மந்திரி பங்கேற்பு
இதேபோல மழையையும் பொருட்படுத்தாமல் கடற்கரைகளிலும் பொது மக்கள் அதிகளவில் திரண்டு விநாயகரை வழிபட்டனர். பொது மக்கள் தவிர பல வெளிநாட்டினரும் கடற்கரைக்கு வந்து ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டத்தை பார்த்து ரசித்தனர்.
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத்ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கிர்காவ் கடற்கரையில் சிலை கரைப்பை பார்த்து ரசித்தனர். அவர்கள் மேடையில் இருந்தபடி மலர் தூவி விநாயகர் சிலைகளை வரவேற்றனர்.
22 மணி நேரம் வலம் வந்த லால்பாக் ராஜா
இதற்கிடையே மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்த லால்பாக் ராஜா நேற்று காலை தான் கிர்காவ் கடற்கரைக்கு வந்தது. லால்பாக் ராஜா விநாயகர் மண்டலில் இருந்து புறப்பட்டு 22 மணி நேரத்துக்கு பிறகு, நேற்று காலை 9.15 மணிக்கு தான் கிர்காவ் வந்தது. இந்த சிலை கரைப்பின்போது பல்லாயிரக்கணக்கில் மக்கள் கிர்காவ் கடற்கரையில் திரண்டனர்.
கிர்காவ் தவிர பாந்திரா, மாகிம், தாதர், ஜூகு, வெர்சோவா, மலாடு உள்ளிட்ட பகுதிகளிலும் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மும்பையில் 73 இயற்கை நீர்நிலைகள், 162 செயற்கை குளங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பெரிய, பெரிய விநாயகர் சிலைகளை கடலுக்குள் எடுத்து சென்று கரைக்க மாநகராட்சி மோட்டார் படகுகளை பயன்படுத்தியது.
38 ஆயிரம் சிலகைள்
நேற்று காலை 9 மணி வரை மும்பையில் 38 ஆயிரத்து 214 சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதில் 31 ஆயிரத்து 259 வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். 6 ஆயிரத்து 647 சிலைகள் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். இதுதவிர 308 கவுரி சிலைகளும் கரைக்கப்பட்டது.
மும்பையில் நேற்று லட்க்கணக்கில் விநாயகரை வழிஅனுப்ப பொது மக்கள் திரண்ட போதும் அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. நகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார், 3,200 அதிகாரிகள் ஈடுபட்டனர். இதேபோல போக்குவரத்து போலீசார், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பான முறையில் நடக்க உறுதுணையாக இருந்தனர்.
இதேபோல மாநகராட்சி சார்பில் 188 கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர கடற்கரைகளில் முதல் உதவி மையங்களும், 83 ஆம்புலன்சுகளும், 786 உயிர்காக்கும் வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
தானே, புனே..
மும்பை தவிர தானே, புனேயிலும் ஆனந்த சதுர்த்தி விமரிசையாக நடந்தது. புனேயில் ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டம் முடிந்து போலீசார் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.