ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
|ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி நபரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி நபரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வேயில் வேலை
தானே மாவட்டம் நந்திவாலி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர வினோத். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் டோம்பிவிலியை சேர்ந்த உமாசங்கர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் தான் ரெயில்வேயில் வேலை செய்து வருவதாகவும், உயர் அதிகாரிகள் அறிமுகம் இருப்பதாகவும், இதன் மூலம் ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் எனவும் அவரிடம் தெரிவித்தார்.
மேலும் அவரை நம்ப வைப்பதற்காக தன்னிடம் இருந்த பணி நியமன ஆணை, ரெயில்வே முத்திரை சான்றிதழ் உள்பட பல ஆவணங்களை காண்பித்தார். இதனை பார்த்த கஜேந்திர வினோத் தனக்கு வேலை வாங்கி தரும்படி அவரிடம் தெரிவித்தார். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.21 லட்சத்து 60 ஆயிரத்தை உமாசங்கரிடம் வழங்கினார்.
3 பேர் கைது
மாதங்கள் கடந்தும் வேலை வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் உமாசங்கர் பணம் தருவதாக கூறி நைசாக நழுவி வந்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் டோம்பிவிலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உமாசங்கருடன் இந்த வழக்கில் ரஞ்சித் குமார், ரவி மகேந்திர சோனி ஆகிய 2 பேருக்கும் மோசடியில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.