இருவேறு இடங்களில் மாட்டிறைச்சி கடத்த முயன்ற 3 பேர் கைது
|இருவேறு இடங்களில் மாட்டிறைச்சியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக நிஜாம்புரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிவண்டி மகாடா காலனி பகுதியில் டெம்போ நின்றுகொண்டு இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த டெம்போ டிரைவர் முகமது அன்சாரி (வயது26) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் டெம்போவில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது அதில் 200 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதே போல மற்றொரு சம்பவத்தில் நேற்று முன்தினம் காலை கச்சேரிபாடா பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ரூ.47 ஆயிரம் மதிப்புள்ள 75 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியை கடத்த முயன்ற ஜூனுட் குரோஷி (19) மற்றும் ஒரு சிறுவன் பிடிபட்டனர். மாட்டிறைச்சியை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட குரோஷி மீது சாந்தி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.