< Back
மும்பை
விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைதான துப்புரவு தொழிலாளிக்கு 3 நாள் போலீஸ் காவல்
மும்பை

விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைதான துப்புரவு தொழிலாளிக்கு 3 நாள் போலீஸ் காவல்

தினத்தந்தி
|
7 Sept 2023 1:00 AM IST

விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி 3 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். இந்த கொலை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி 3 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். இந்த கொலை பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

விமான பணிப்பெண் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஒக்ரே(வயது24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் விமான பணிப்பெண் வேலைக்காக மும்பை வந்தார். அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் சகோதரியின் ஆண் நண்பருடன் வசித்து வந்தார். சமீபத்தில் ரூபால் ஒக்ரேயின் சகோதரி, ஆண் நண்பர் சொந்த ஊர் சென்றுவிட்டனர். விமான பணிப்பெண்ணான இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

துப்புரவு தொழிலாளி கைது

போலீசார் கட்டிட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கட்டிடத்துக்கு வந்து சென்ற அனைவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது கட்டிட துப்புரவு தொழிலாளி விக்ரம் அத்வால்(வயது40) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் தொழிலாளியின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் இளம்பெண்ணை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தகறை படிந்த சட்டையை பறிமுதல் செய்தனர்.

கொலை செய்தது ஏன்?

துப்புரவு தொழிலாளியான விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேவுக்கும் சிறிய, சிறிய விஷயங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. சம்பவத்தன்று இளம்பெண் தனியாக இருப்பதை துப்புரவு தொழிலாளி கவனித்து உள்ளார். எனவே இளம்பெண்ணை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் கத்தியுடன் குப்பை சேகரிப்பது போல இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என கூறி வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார். வீட்டின் கதவை பூட்டிய அவர் கத்தியால் இளம்பெண்ணை தாக்க முயற்சி செய்தார். இளம்பெண் அவரை தடுத்து போராடினார். இதனால் விக்ரம் அத்வாலின் கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த விக்ரம் அத்வால் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் இளம்பெண்ணின் உடலை வீட்டின் குளியல் அறையில் போட்டுவிட்டு, கதவை பூட்டிவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

போலீஸ் காவல்

விக்ரம் அத்வாலே பாலியல் ரீதியாக இளம்பெண்ணை துன்புறுத்தவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையே மும்பை வந்த ரூபால் ஒக்ரேவின் குடும்பத்தினர் அவரது உடலை பெற்று கொண்டனர். போலீசார் விக்ரம் அத்வாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 8-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது.

மேலும் செய்திகள்