27 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது: புனே மாவட்ட மலைப்பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
|கனமழை காரணமாக புனே மாவட்ட மலைப்பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புனே,
கனமழை காரணமாக புனே மாவட்ட மலைப்பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
27 செ.மீ. மழை
மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. புனே மாவட்டத்திலும் மழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவல் தாலுகாவில் உள்ள லோனாவாலாவில் 27.3 செ.மீ. மழையும், முல்சி தாலுகாவில் உள்ள லவாசா மலைப்பகுதிகளில் 14.3 செ.மீ. மழையளவும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் புனே மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தேஷ்முக் உத்தரவிட்டு உள்ளார்.
பள்ளிகள் விடுமுறை
அந்த உத்தரவில், புனே மாவட்டத்தின் மலைப்பிரதேசங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனவே அம்பேகாவ், கெத், ஜூன்னார், போர், புரந்தர், முல்சி மற்றும் மாவல் தாலுகாக்களில் மலைப்பகுதிகளில் உள்ள 355 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்வி அலுவலர்கள் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.