< Back
மும்பை
ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்; ரூ.70 லட்சம் ரொக்கமும் சிக்கியது
மும்பை

ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்; ரூ.70 லட்சம் ரொக்கமும் சிக்கியது

தினத்தந்தி
|
21 Oct 2023 12:45 AM IST

ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் டாக்டர் வீட்டில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுரூ.70 லட்சம் ரொக்க பணமும் சிக்கியது

நாக்பூர்,

நாக்பூரை சேர்ந்த தொழில் அதிபர் விக்ராந்த் அகர்வால். இவருக்கு ஆனந்த் ஜெயின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் ஆன்லைன் சூதாட்டம் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என தொழில் அதிபரிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய தொழில் அதிபர் அவர் கூறியபடி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதில் ரூ.58 கோடியை இழந்தார். இதன்மூலம் தான் மோசடியில் சிக்கியதை உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் நாக்பூர் போலீசார் கடந்த ஜூலை மாதம் கோண்டியாவில் உள்ள ஆனந்த் ஜெயின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து ரூ.26.39 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆனந்த் ஜெயின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வங்கி லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம். ரூ.85 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த வழக்கில் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆனந்த் ஜெயின் சமீபத்தில் போலீசில் சரண் அடைந்தார். இந்த நிலையில் போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் கோண்டியா மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் டாக்டர் கவுரவ் பக்கா என்பவரின் வீட்டில் இருந்து 2.4 கிலோ தங்கம் மற்றும் ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல பண்டாரா மாவட்டத்தில் வங்கி ஊழியர் ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்