போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது
|தானே மாவட்டம் பிவண்டியில் போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது
தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் ரசீதுகளை தயாரித்து அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக ஜி.எஸ்.டி. கமிஷனர் சுமித்குமாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் படி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 36 நிறுவனங்களின் பெயரில் இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் 132 கோடி மதிப்புள்ள சரக்குகளை அனுப்பியதாக போலி சான்றிதழ் உருவாக்கி உள்ளனர். இந்த சான்றிதழ்களை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் சமர்பித்து ரூ.23 கோடியே 16 லட்சம் வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர் ஹஸ்முக் பட்டேல் என்பவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி அதிகாரிகள் அவரை நேற்று முன்தினம் மும்பையில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.