துல்ஜா பவானி கோவிலில் 207 கிலோ தங்கம், 1,280 கிலோ வெள்ளி காணிக்கை
|துல்ஜா பவானி கோவிலில் முதல் வார கணக்கெடுக்கும் பணியில் 207 கிலோ தங்கம், 1,280 கிலோ வெள்ளி காணிக்கை கிடைத்து உள்ளது.
அவுரங்காபாத்,
துல்ஜா பவானி கோவிலில் முதல் வார கணக்கெடுக்கும் பணியில் 207 கிலோ தங்கம், 1,280 கிலோ வெள்ளி காணிக்கை கிடைத்து உள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு...
அவுரங்காபாத்தில் உள்ள துல்ஜாபூர் பகுதியில் பிரசித்தி பெற்ற துல்ஜா பவானி கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டு கால பழமையான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்காக பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க பொருட்களை கணக்கிடும் பணியை ஒரு வாரத்திற்கு முன்பு கோவில் நிர்வாகமும், அறக்கட்டளையும் தொடங்கி உள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணி 15 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி விஸ்வாஸ் கதம் நேற்று வெளியிட்ட தகவலில் கூறியதாவது:-
207 கிலோ தங்கம்
இதுவரை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 207 கிலோ தங்கம் மற்றும் ஆபரணங்கள், 1,280 கிலோ வெள்ளி மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 354 வைரம் ஆகியவை கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த காணிக்கை கணக்கிடும் பணி அடுத்த 15 நாட்கள் நடக்கும். இதற்காக 35 பேர் கொண்ட குழு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தினமும் வேலை செய்கிறது. இந்த குழுவுக்கு உணவும், குளிர்பானமும் உள்ளேயே வழங்கப்படுகிறது. கணக்கிடும் பணி நடக்கும் பகுதியில் சுமார் 35 முதல் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.