< Back
மும்பை
நவிமும்பையில் லாரிகளை நிறுத்த 20 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிப்பு- கலெக்டரிடம் புகார்
மும்பை

நவிமும்பையில் லாரிகளை நிறுத்த 20 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிப்பு- கலெக்டரிடம் புகார்

தினத்தந்தி
|
25 Sept 2022 1:15 AM IST

நவிமும்பையில் லாரிகளை நிறுத்த 20 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நவிமும்பையில் லாரிகளை நிறுத்த 20 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கலெக்டரிடம் புகார்

மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு அல்லது ஈரநிலக்காடுகள் அதிகளவில் உள்ளது. இதை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நவிமும்பை, வசாய் போன்ற பகுதிகளில் சமூகவிரோத கும்பலால் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இந்தநிலையில் நவிமும்பையில் உரன் தாலுகாவில் உள்ள துடும் பகுதியில் லாரி நிறுத்தத்திற்காக மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், மும்பை ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட மாங்குரோவ் பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஸ்டாலின் ராய்காட் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார்.

20 ஏக்கர் காடுகள் அழிப்பு

அந்த புகாரில் லாரி நிறுத்தத்திற்காக 20 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் புகாரில், " தற்போது மாங்குரோவ் மரங்கள் வெட்டப்படுவதை காணமுடிகிறது. அந்த பகுதி லாரி மற்றும் கண்டெய்னர் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இது சாலையோரம் பல அதிகாரிகள் வந்து செல்லும் இடத்துக்கு அருகில் அரங்கேறி உள்ளது. எனவே அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, மீண்டும் அந்த இடத்தில் பழையபடி மாங்குரோவ் காடுகளை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் சிட்கோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது " என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்